நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் FQL இன்வெஸ்ட்மெண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் தொடர்பான பிரச்சினையில், நத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தனது மகனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவரது தாய் மஞ்சு குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல், நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த FQL இன்வெஸ்ட்மெண்ட் என்ற தனியார் நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்தை 45 முதல் 65 நாட்களுக்குள் இரட்டிப்பாக வழங்குவதாகக் கூறி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் இணையதளம் திடீரென முடங்கியதாகவும், இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, காசம்பட்டி பகுதியில் அந்த நிறுவனத்தின் முகவர்களாக செயல்பட்டதாக கூறப்படும் ரமேஷ், அவரது மனைவி அனிதா மற்றும் உறவினர் விஜய் ஆகியோரின் வீடுகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு சேதப்படுத்தியதாக தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூவரையும் மீட்டு மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த ராசு என்பவர் தனது தலைமையில் 150-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்து அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. பண இழப்பு தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த ராசு, பின்னர் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
ராசுவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரிடம் பணம் செலுத்தியதாக கூறப்படும் 5 பேர் மிரட்டி தாக்கியதால் அவர் உயிரிழந்ததாகவும், பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து ராசுவின் உடலை நத்தம் – மதுரை நான்கு வழிச்சாலையில் வைத்து 3 மணி நேரத்திற்கும் மேலாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது உடலை மீட்க போலீசார் முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், போலீஸ் வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற உள்ள உடற்கூறாய்வின்போது அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், நகர் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், ராசுவின் உடலை பெற்றுக்கொள்வதற்காக அவரது தாய் மஞ்சு மற்றும் உறவினர்கள் தனி வாகனம் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை கூடத்திற்கு வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராசுவின் தாய் மஞ்சு, தனது மகன் பல்வேறு நபர்களிடம் பணம் வசூலித்து நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார்.
மேலும், சிலர் செல்போன் மூலம் ராசுவை தொடர்பு கொண்டு, பின்னர் வீட்டிற்கு வந்து அவரை அழைத்துச் சென்றதாகவும், அவரிடம் பணம் வசூல் செய்து கொடுத்தவர்களின் பட்டியலையும் எடுத்துச் சென்றதாகவும் மஞ்சு கூறினார்.
அதன்பின்னர் சிறிது நேரத்தில் தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, ராசுவின் காது, இடுப்பு மற்றும் கால் உள்ளிட்ட உடல் பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் மஞ்சு குற்றம்சாட்டினார்.
எனவே, தனது மகனின் மரணம் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், உடலை பெற்றுக்கொள்ள தாங்கள் முழு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் ராசுவின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

