விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காகித அட்டை பேக்கேஜிங் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காகித அட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் கார்த்திக்கேயனுக்கு சொந்தமான APG காகித அட்டை பேக்கேஜிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காகித அட்டைகளை ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பசையை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக காகித அட்டைகளில் தீப்பற்றியுள்ளது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி, நிறுவனத்தின் குடோனில் வைக்கப்பட்டிருந்த காகித அட்டை பண்டல்களிலும் தீப்பற்றியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே, நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
எனினும், தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காகித அட்டை பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

