கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், உரம் வழங்காதது குறித்து கேள்வி எழுப்பியதற்காகத் தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட சமூக ஆர்வலர் அமிர்தானந்தம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். மனுவில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அமிர்தானந்தம், கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயக் கடன் பெற்றுள்ளார். இதில், 68 ஆயிரத்து 475 ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 6 ஆயிரத்து 325 ரூபாய் மதிப்பிலான உரம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக உரம் விற்பனையாளர் செந்தில்குமார் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி, அமிர்தானந்தம் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்காகச் சென்றபோது, கூட்டுறவு சங்க அலுவலகத்தில் ஆமை விட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 17 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாகவும் அமிர்தானந்தம் தெரிவித்துள்ளார். தற்போது, கிருஷ்ணராயபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், கூட்டுறவு சங்கத்தில் முறையான தணிக்கை மேற்கொண்டால் பல கோடி ரூபாய் அளவிலான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும் எனக் குற்றம்சாட்டியுள்ள அமிர்தானந்தம், தனக்கு உரம் வழங்காதது தொடர்பாகவும், தன் மீது வழக்குப் பதிவு செய்யக் காரணமானவர்கள் மீதும், கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் புகார்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா என்பதே தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.

