குலசேகரப்பட்டினம், மைசூர் தசரா திருவிழாக்களுக்கு அடுத்தபடியாக தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாக்களில் ஒன்றாக பாளையங்கோட்டை தசரா திருவிழா பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தசரா திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளின் தொடக்க நிகழ்வான கால் நாட்டுதல் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, பாளையங்கோட்டையில் உள்ள 12 பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் இருந்து திருக்கால்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர், பாளையங்கோட்டையில் உள்ள அம்மன் கோவில்களின் தலைமை பீடமாக விளங்கும் ஆயிரத்தம்மன் கோவிலில் திருக்கால்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கால் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தசரா திருவிழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. கோவில் வளாகங்களை சுத்தம் செய்தல், பந்தல் அமைத்தல், சப்பரங்கள் தயாரித்தல் உள்ளிட்ட திருவிழா ஏற்பாட்டுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அக்டோபர் 10-ல் கொடியேற்றம்
பாளையங்கோட்டை தசரா திருவிழா அக்டோபர் 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
மாலையில் 11 அம்மன் கோவில்களைச் சேர்ந்த அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி, மின்னொளி அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் கொலு பூஜைகளும் நடைபெற உள்ளன.
அக்டோபர் 21-ல் மகிஷாசுர சம்ஹாரம்
தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்டோபர் 21-ந்தேதி மகிஷாசுர சம்ஹாரம் நடைபெற உள்ளது.
அன்று 12 அம்மன் கோவில்களில் இருந்தும் அம்மன்கள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் சிம்ம வாகனங்களில் எழுந்தருளுவர். மின்னொளி அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் அம்மன்கள் வீதி உலா வந்து, பின்னர் எருமைக்கடா மைதானத்தில் மகிஷாசுர சம்ஹாரம் நடைபெற உள்ளது.
இதையொட்டி பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

