திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 57-வது வார்டு பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், விநியோகிக்கப்படும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருவதாகவும் குற்றம்சாட்டி, 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சியின் 57-வது வார்டுக்குட்பட்ட அரசு காலனி, எம்.ஜி.ஆர். நகர், கொல்லங்குளம், பாரதி நகர் மற்றும் நல்ல தண்ணீர் கேணித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், சில நேரங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதனால் அந்த தண்ணீரை குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, 57-வது வார்டு கவுன்சிலர் முத்துசெல்வம் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் அலுவலகத்திற்கு வந்தார். அவரை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முற்றுகையிட்டு, தங்கள் பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆணையர், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் முறையாக விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், தங்கள் பகுதிகளில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்றும், விநியோகிக்கப்படும் தண்ணீரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பெண்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இடையே ஆணையர் அங்கிருந்து புறப்பட்டு மாநகராட்சி அலுவலகத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் 57-வது வார்டு கவுன்சிலர் முத்துசெல்வத்தை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. தங்கள் பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

