முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான ஆன்லைன் டெண்டர் முறையை ரத்து செய்து, உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த உணவுத் தொழிலில் ஈடுபடும் மகளிருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பெரியகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த நாகமணி, கடந்த சில ஆண்டுகளாக உணவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக பள்ளி மாணவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணிக்கான ஆன்லைன் டெண்டர் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தேனி மாவட்டத்தில் சுமார் 40 பள்ளிகளில் பயிலும் 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் டெண்டரில் பங்கேற்பதற்கு ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் கட்டாயமாக கோரப்படுவதாகவும், இதன் காரணமாக சிறு, குறு மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் பலர் டெண்டரில் பங்கேற்க முடியாமல் சிரமம் அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை உள்ளூர் பகுதியைச் சேர்ந்த உணவுத் தொழிலில் ஈடுபடும் மகளிருக்கு வழங்கும் வகையில், தற்போதைய ஆன்லைன் டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என நாகமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உள்ளூர் அளவில் தகுதியான மகளிரைத் தேர்வு செய்து அவர்களுக்கு இந்தப் பணிக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

