தாணிப்பாறை அடிவாரத்தில் பக்தர்கள் சாலை மறியல்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், காட்டுத்தீ காரணமாக பக்தர்கள் மலையேறத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, தாணிப்பாறை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீப் பற்றி எரியத் தொடங்கியதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி நேற்றும் இன்றும் பக்தர்கள் மலையேற மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர். மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும் காவல்துறையினரும் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பக்தர்கள் அடிவாரச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், காட்டுத்தீயின் ஆபத்து மற்றும் பாதுகாப்பு காரணங்கள் குறித்து பக்தர்களிடம் விரிவாக எடுத்துக்கூறி சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்ட பக்தர்கள், தாணிப்பாறை அடிவாரப் பகுதியிலும் நுழைவாயிலிலும் நின்றவாறே சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்குச் செல்ல முடியாத ஏமாற்றத்துடன் ஏராளமான பக்தர்கள் தொடர் காத்திருப்பில் ஈடுபட்டுள்ளதால், அடிவாரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

