விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம. சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, வரும் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அருப்புக்கோட்டை மெயின் ரோடு, பாலவநத்தத்தில் அமைந்துள்ள ஜெய்சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் எலிவேட் டிஜி டெக்னாலஜி, அடையார் ஆனந்தபவன், டிவிஎஸ் சுந்தரம், செபாஸ் மெடிகல், தேவேந்திரன் பிளாஸ்டிக்ஸ், பீமா ஜூவல்லரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு வரை பல்வேறு கல்வித் தகுதிகளை கொண்ட வேலை நாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்பை பெறலாம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள், முகாமில் பங்கேற்பதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், சுயவிவரச் சான்றிதழ், அனைத்து கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கும் அழைப்பு
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தங்களது நிறுவனத்திற்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார்துறை நிறுவனங்களும் பங்கேற்கலாம். இதற்காக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 9360171161 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெறும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம. சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

