விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்த ஜன்னல் கதவுகள் ஆபத்தான நிலையில் இருப்பதால், அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பயன்படுத்தி வரும் கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சில ஜன்னல் கதவுகள் சேதமடைந்து, மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக, உயரமான பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சில ஜன்னல் கதவுகள் பாதுகாப்பற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவை எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் இருப்பதால், மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு வந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி செயல்படும் நேரத்தில் ஜன்னல் கதவுகள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தால், மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த ஜன்னல் கதவுகளை உடனடியாக அகற்றவோ அல்லது பாதுகாப்பான முறையில் சீரமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

