திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சந்தைப்பேட்டை பகுதியில், மின் டெபாசிட் தொகையை செலுத்தாமல் மின் கட்டணத்தை மட்டும் செலுத்துவதற்கு லஞ்சம் பெற்றதாக மின்வாரிய அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பானதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனாம்குளத்தூர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், அப்பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இந்த மாதம் அவரது மின் கட்டணத்துடன் கூடுதலாக டெபாசிட் தொகையும் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் வண்ணாங்கோவில் மின்வாரிய ஆர்.எஸ். பிரிவு அதிகாரி பழனிச்சாமியிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, மின் கட்டணம் ரூ.7,000 என்றும், அதனுடன் ரூ.21,000 டெபாசிட் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு
மின் கட்டணத்தை மட்டும் தனியாக செலுத்துவதற்கு வழிவகை செய்வதற்காக ரூ.10,000 லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூ.6,800 வழங்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைமுகமாக வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
லஞ்சப் பணத்தை அதிகாரி பெற்றுக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் இந்த வீடியோ, திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ மற்றும் அதில் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணையின் முடிவிலேயே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

