Settings

முகப்பு/செய்திகள்/தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் மேம்பாடு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
செய்திகள்

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் மேம்பாடு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

🕒 25 அக்., 2026, 08:58 AM
⏱️ 4 நிமிடம் வாசிப்பு
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் 
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் மேம்பாடு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (25.10.2026) மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் தலைமையில் திரிவேணி குழுமம் மற்றும் லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி லிமிடெட் நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து விளையாட்டு மைதானம் மேம்பாடு செய்யும் பணியினை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், திருச்செங்கோடு பகுதியில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது. திருவேணி எர்த் மூவர்ஸ் மற்றும் லாயிட்ஸ் மெட்டல் அண்ட் எனர்ஜி லிமிடெட் நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் மூலம் இந்த வளாகம் உருவாக்கப்படுகிறது. இது வெறும் அடிக்கல் நாட்டு விழா அல்ல, இளைஞர்களின் எதிர்காலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா. திருச்செங்கோடு நீண்ட காலமாக காத்திருந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறமையைக் கண்டறிந்து வலிமைப்படுத்துவது, விளையாட்டு ஒழுக்கம், உடல்நலம், தன்னம்பிக்கை மற்றும் கூட்டுமுயற்சியை வளர்ப்பது, தீய பழக்கங்களிலிருந்து இளைஞர்களைக் காப்பது, உதவித்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் தேசிய அங்கீகாரம் நோக்கி வழி காட்டுவது ஆகியவை இந்த விளையாட்டு வளாகத்தின் நோக்கமாகும். இது தேர்தல் காலத்தில் திருச்செங்கோடு தொகுதி அறிவிக்கப்பட்ட வாக்குறுதி, இன்றைய தினம் நிறைவேற்றப்படத் தொடங்குகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவர்களுடைய பெரிய இலட்சியமே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். அதற்கு விளையாட்டு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கண்டிப்பாக தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக் பதக்கம் வரணும் அப்படிங்கிறதுதான் அவர்களுடைய இலட்சியம். நம்மளுடைய இலட்சியம் என்னன்னா, தமிழ்நாட்டின் ஒலிம்பிக் பதக்கம் திருச்செங்கோடு பகுதியில இருந்து வர வேண்டும் என்பதே. எனவே இந்த மைதானத்தை ஏற்படுத்தி வழங்கிய திரிவேணி குழுமம் மற்றும் திருச்செங்கோடு தொகுதியின் அனைத்து மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு ஒத்துழைத்த நமது மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். திருச்செங்கோடுக்கு மட்டுமல்ல, நாமக்கல் மாவட்டத்திலே இந்த மாதிரி ஒரு வசதிகள் கொண்ட ஒரு விளையாட்டு வளாகம் அமைவது இதுதான் முதல் முறை. இந்த வளாகத்தில் 8 தடங்கள் கொண்ட செயற்கை ஓடுதளம், 25மீ x 50மீ அளவிலான முழுமையான ஒலிம்பிக் தர நீச்சல் குள வசதி, ஃபிஃபா FIFA தரத்திலான கால்பந்து மைதானம், கிரிக்கெட் மைதானம், கைப்பந்து (வாலிபால்) மைதானம், கூடைப்பந்து மைதானம், உள்ளரங்க உடற்பயிற்சிக் கூடம், பொதுமக்களுக்கான வெளிப்புற உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இனி நம் பிள்ளைகள் பயிற்சிக்காக சேலம், ஈரோடு, கோவை என்று அலைய வேண்டியதில்லை; நாளைய சாம்பியன்கள் திருச்செங்கோட்டிலேயே உருவாவார்கள். இது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமல், உடல்நலம் பேண விரும்பும் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்குமானது. திருச்செங்கோடு தொகுதி மக்கள் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி (Walking) செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களின் வசதியையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில், புதிய விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்படவுள்ள ஓடுதளத்தை (Track) சுற்றியும் வெளிப்புறப் பகுதியில் பொதுமக்களுக்காக பிரத்யேக நடைப்பயிற்சித் தடம் அமைக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய திட்டத்திற்கு நம் மக்கள் மீது நம்பிக்கை கொண்ட பங்குதாரர்கள் தேவை. தங்கள் சமூக பொறுப்பு பங்களிப்பின் மூலம் இதைச் சாத்தியமாக்கிய திரிவேணி மற்றும் லாய்ட்ஸ் மெட்டல்ஸ் நிறுவனங்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் முதலீடு செய்திருப்பது கட்டிடங்களில் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில், திருச்செங்கோடு இதை என்றும் நினைவில் கொள்ளும். இப்பணிகளை 6 முதல் 9 மாதங்களுக்குள், 2027-ல் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளின் முன்னேற்றத்தை நேரில் கண்காணித்து, குறித்த நேரத்தில் இந்த வளாகம் இளைஞர்களுக்காகத் திறந்து வைக்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது. திருச்செங்கோடு தொகுதியில் இளைஞர்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகில் இதில், மாபெரும் கல்விக் கடன் மேளா நடத்தப்பட்டு ரூ. 4 கோடி மதிப்பிலான கல்விக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, 1,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. திருச்செங்கோடு NEXT மூலம் ஒவ்வொரு மாதமும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இளைஞர்கள் அர்ப்பணிப்போடு சேவை செய்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, சேவை – இப்போது விளையாட்டு என ஒருங்கிணைந்து ஒரு முழுமையான இளைய தலைமுறை உருவாக்கப்படுகிறது. நம் பணி இத்துடன் நின்றுவிடாது, அடுத்து தொகுதிக்காக அதிக பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் திருச்செங்கோடுக்கு ஈர்த்து, உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரம் பெருக்குவது, நம் ஊரின் காந்திய பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பது, அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு இரண்டாவது நுழைவு வழியில் பக்தர்களுக்கு எளிதான, பாதுகாப்பான அணுகல், நம் தொழிலாளர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கும் வகையில் புதிய ESI மருத்துவமனை தொடங்கும் திட்டம், நம் மாணவர்களுக்குச் சிறந்த வகுப்பறைகளுடன் கலைக் கல்லூரிக்குப் புதிய சொந்தக் கட்டடம் என பல்வேறு திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மைதானம் திருச்செங்கோடு இளைஞர்களுக்குரியது; இதைப் பயன்படுத்துங்கள், பாதுகாத்திடுங்கள், மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஊருக்குப் பெருமை சேருங்கள். இதே நீச்சல் குளத்தில் நீந்தக் கற்ற ஒருவர் நாளை ஒலிம்பிக்கில் பங்கேற்பதைக் காண வேண்டும் என்பதே என் கனவு. திரிவேணி, லாய்ட்ஸ் மெட்டல்ஸ் நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும், திருச்செங்கோடு NEXT உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. ஆரோக்கியமான, வலிமையான, முன்னேறிய திருச்செங்கோட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம். திருச்செங்கோடு தொகுதிக்கான குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களைச் செயல்படுத்தவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, மாண்புமிகு முதலமைச்சரின் 110 விதியின் கீழ் திருச்செங்கோடு தொகுதிக்கு கூட்டுக் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.60.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடைத் திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்துவது போன்ற முக்கிய கோரிக்கைகளும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் சார்பில், திரிவேணி குழுமம் மற்றும் லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி லிமிடெட் நிறுவனங்களின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பேவர் பிளாக் கற்கள் அமைத்தல், தடங்கள் ஓடுதளத்தின் வெளிப்புறத்தில் வடிகால் அமைத்தல், திறந்த வெளி அரங்கம் அமைத்தல், நீச்சல் குளத்திற்கான கட்டுமானப் பணிகள், தற்போதுள்ள பார்வையாளர் மாடத்தை விரிவாக்கம் செய்தல் மற்றும் மேற்கூரை அமைத்தல், மழைநீர் சேகரிப்புத் தொட்டி மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் குழி அமைத்தல், உயர்மின் விளக்குக் கோபுரம் நிறுவுதல் மற்றும் குழாய், மின்சாரப் பணிகளின் முதற்கட்டப்பணிகள், செயற்கைப் பு்தரையுடன் கூடிய கால்பந்து மைதானம், 8 தடங்களைக் கொண்ட செயற்கை ஓடுதளம் அமைத்தல், ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளளம் அமைத்தல், கிரிக்கெட் ஆடுகளத்திற்கான தரைப் பகுதி அமைத்தல் ஆகிய மேம்பாட்டு பணிகளை தொடங்க வைத்தார். தொடர்ந்து, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கைப்பந்தாட்ட திடலினை பயன்பாட்டிற்கு வழங்கி, கைப்பந்தாட்டம் விளையாடினார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சந்திரா, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின், நிர்வாக இயக்குநர் (திரிவெணி குழுமம், லாய்ட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி லிமிடெட்) பிரபாகரன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔