Settings

முகப்பு/செய்திகள்/சேறும் சகதியுமாக மாறிய சாயல்குடி பேரூராட்சி! பெயரில் மட்டுமே மகிழ்ச்சி.. வாழும் வாழ்க்கையோ நரகம் என பொதுமக்கள் விரக்தி - பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை; மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் மீது கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

சேறும் சகதியுமாக மாறிய சாயல்குடி பேரூராட்சி! பெயரில் மட்டுமே மகிழ்ச்சி.. வாழும் வாழ்க்கையோ நரகம் என பொதுமக்கள் விரக்தி - பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை; மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் மீது கடும் குற்றச்சாட்டு!

🕒 25 அக்., 2026, 07:25 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியின் 9-வது வார்டுக்கு உட்பட்ட மகிழ்ச்சி நகர் பகுதியில், மழைக்காலம் வந்தாலே பொதுமக்களின் வாழ்க்கை நரகமாக மாறும் அவலநிலை தொடர்கிறது. ஹவுசிங் போர்டு அருகே இருவேலி – மகிழ்ச்சி நகர் சிறுவர் பூங்காவை ஒட்டியுள்ள ஐந்து தெருக்களில் மழைநீர் தேங்கி, சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ள நிலையில், பொதுமக்களின் தொடர் புகார்களைக் கண்டுகொள்ளாமல் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாயல்குடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அவற்றில் 9-வது வார்டுக்கு உட்பட்ட இருவேலி – மகிழ்ச்சி நகர் பகுதியில் உள்ள ஐந்து தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதி மக்களுக்கு முறையான மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாததால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் தெருக்கள் முழுவதும் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கின்றன. மக்கள் நடந்து செல்வதற்குக்கூடத் தகுதியற்ற நிலையில் சாலைகள் இருப்பதால், பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சேற்றில் கால் வைத்துச் செல்லும்போது வழுக்கி விழுந்து காயமடையும் நிலையும் ஏற்படுவதாகவும், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மகிழ்ச்சி நகர் என பேரூராட்சி நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு என்ன மகிழ்ச்சி இருக்கிறது என்று புரியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர் ஆனால் நாங்கள் நரக வாழ்க்கை வாழ்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாகப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் சென்று புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒவ்வொரு முறையும் புகார் அளிக்கும்போது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கும் நிர்வாகம், அதன் பின்னர் பிரச்சினையை மறந்துவிடுவதாக அவர்கள் ஆதங்கப்படுகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் இயங்கக்கூடிய உள்ளாட்சி நிர்வாகம், மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மழைநீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத அளவுக்கு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறதா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தெருக்களில் நீண்டகாலமாகத் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீர் காரணமாகச் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் நிலவுவதால், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவக்கூடும் என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது. முறையான கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் மற்றும் தண்ணீர் வெளியேறுவதற்கான வழித்தடங்கள் அமைக்கப்படாததே இந்த அவலநிலைக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இல்லை என்றும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவுக்குச் செல்லும் பாதையிலும் சேறும் சகதியும் அதிகளவில் காணப்படுகிறது. பூங்காவுக்குள்ளும் மழைநீர் தேங்குவதால், விளையாடச் செல்லும் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாவதுடன், சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சமும் பெற்றோரிடம் நிலவுகிறது. குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பூங்காவையே பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் பராமரிப்பு மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது என்ற கேள்வி எழாமல் இல்லை. தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் கட்சியினரும் அதிகாரிகளும் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் செல்வதாகவும், தேர்தல் முடிந்ததும் மக்களின் பிரச்சினைகளை மறந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அடிப்படை வசதிகளுக்காக ஒவ்வொரு மழைக்காலத்திலும் போராட வேண்டிய நிலை தொடர்வது உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்த அதிருப்தியை அதிகரித்துள்ளது. எனவே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பகுதியை ஆய்வு செய்து, மழைநீர் தேங்குவதற்கான காரணங்களைக் கண்டறியவும், முறையான வடிகால் வசதி அமைக்கவும், சாலைகளைச் சீரமைக்கவும், சிறுவர் பூங்கையைச் சுகாதாரமான முறையில் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது. மக்களின் அவலத்தை இனியும் வேடிக்கை பார்க்கப்போகிறதா சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம்? அல்லது மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டுக்குப் பிறகாவது நிரந்தரத் தீர்வு கிடைக்குமா? என்பதே தற்போது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔