செய்திகள்
காட்பாடியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பு...
🕒 25 அக்., 2026, 12:51 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
வேலூர் மாவட்டம்
25-10-26
காட்பாடியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பு...
விஜயதசமி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்பேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் பிரம்மாண்ட சீருடை அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு தொடக்க விழாவை ஒட்டி, நாடு முழுவதும் விஜயதசமி நாளில் நடைபெறும் அணிவகுப்பு ஊர்வலத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. காட்பாடி ஓட்டைப் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த ஊர்வலமானது தொடங்கியது.
அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தங்களது பாரம்பரிய சீருடையுடன் காட்பாடியின் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுத்துச் சென்றனர். இந்த ஊர்வலம் சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு டாக்டர். சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ராமகிருஷ்ண பிரசாத் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பானது சமூகம் மற்றும் தேச நலனுக்காக முன்னெடுத்து வரும் சமுதாய நல்லிணக்கம், குடும்ப அமைப்பு முறையைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் குடிமக்கள் கடமைகளை முறையாகப் பின்பற்றுதல் ஆகிய 5 முக்கிய மாற்றங்களை மக்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதிசெய்ய ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
