வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் 44 சதவீத மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என்று மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் சின்னம் காரணமாக திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு தொடங்கிய மழை தொடርவதால், நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
வானிலை ஆய்வு மையம் காலை 11 மணி வரை மட்டுமே மழை பெய்யும் என தெரிவித்திருந்த நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. அதனைத் தொடர்ந்து பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டன.
இந்த நிலையில், மாவட்ட முழுவதும் உள்ள 1069 பள்ளிகளில் 93,821 மாணவ, மாணவிகள் பயின்று வரும் சூழலில், 52,719 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குச் சென்றுள்ளனர். மீதமுள்ள 41,102 மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லவில்லை.
அதன்படி ஒட்டுமொத்தமாக இன்று 44 சதவீத மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என மாவட்ட கல்வித்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

