நெல்லையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஆண்டு தோறும் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 28- வது அரசு பொருட்காட்சி இன்று பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் பள்ளி அருகிலுள்ள மைதானத்தில் தொடங்கியது . இதன் தொடக்கவிழாவில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் கலந்து கொண்டு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இதில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, வனத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட 26 அரசுத்துறைகளின் அரங்குகளும், மாநகராட்சி, ஆவின், கோ-ஆப்டெக்ஸ் உள்ளிட்ட 5 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகளும் என மொத்தம் 31 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகள் மூலம் அரசு திட்டங்களை மக்கள் எவ்வாறு பெறுவது என்பது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர். கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற நெல்லை பொருட்காட்சியினை 35,151 பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். இந்த ஆண்டு பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் நுழைவுச்சீட்டு பெறும் வகையில் புதிய தொழில்நுட்பமாக 'யுபிஐ கியூஆர் கோடு' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுஇக்கண்காட்சி இன்று முதல் 45 நாட்களுக்கு நடைபெற உள்ளது. தினமும் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொருட்காட்சி நடைபெறும். பொதுமக்களின் வசதிக்காக பொருட்காட்சி தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரை தினமும் மதியம் 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொருட்காட்சியில் பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு சலுகை கட்டணமாக ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருட்காட்சியில் குழந்தைகளைக் கவரும் ராட்டினங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், கண்கவர் கிராமிய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெண்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய வணிக வளாகங்கள் மற்றும் சிற்றுண்டி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடக்க நிகழ்வில் அரசுதுறை அதிகாரிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
28-வது நெல்லை அரசு பொருட்காட்சி 2026 கோலாகல தொடக்கம்
🕒 29 ஆக., 2026, 07:48 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
