விருதுநகர் அருகே ரயிலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் சுமார் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ரயில்களில் கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (செப்டம்பர் 6) தனிப்படை போலீசார் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
புருலியாவில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த 22605-ம் எண் புருலியா–திருநெல்வேலி விரைவு ரயில், மதுரை மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.
ரயிலின் முன்பகுதியில் உள்ள பொதுப்பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக கிடந்த வெள்ளை நிற சாக்குப் பையை போலீசார் சோதனையிட்டனர். அதற்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் சுமார் 15 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சார்பு ஆய்வாளர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ரயிலில் குட்காவை கொண்டு வந்தது யார்? அவற்றை எங்கிருந்து கொண்டு வந்தனர்? எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறியும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

