விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட கொருக்காம்பட்டி கிராமத்திலிருந்து இராஜபாளையத்திற்கு செல்லும் புதிய அரசுப் பேருந்து சேவையை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சுகபுத்ரா அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பேருந்து சேவையைத் தொடங்கி வைத்து அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி பேசுகையில், "கிராமப்புற பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக அருகிலுள்ள நகர்ப்புறப் பகுதிகளுக்கு எளிதில் சென்று வரும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அதன் முக்கிய ஒரு பகுதியாகவே கொருக்காம்பட்டி - இராஜபாளையம் வழித்தடத்தில் இந்த புதிய பேருந்து சேவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "இப்புதிய பேருந்து வசதி மூலம் கொருக்காம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் இராஜபாளையம் மற்றும் அதன் வழித்தடப் பகுதிகளுக்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவிகளுக்கும், பணிகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கும் இச்சேவை பெரிதும் பயனுள்ளதாக அமையும்," எனத் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வர்த்தக மையங்களுக்குச் சென்று வர பயண நேரமும் அலச்சலும் பெருமளவில் குறையும் என்றும்; இப்போக்குவரத்து வசதி கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை நல்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தங்களின் நீண்ட நாள் போக்குவரத்து கோரிக்கை நிறைவேறியதை அடுத்து, கொருக்காம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் துறை உயர் அலுவலர்கள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

