விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, காலிக்குடங்களுடன் அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சாத்தூர் அருகே உள்ள பனையடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கண்டியாபுரம் கிராமத்தில் கடந்த பல மாதங்களாகக் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்துள்ளனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இன்று ஏழாயிரம்பண்ணையிலிருந்து சாத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை காலிக்குடங்களுடன் சிறைபிடித்துச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகளுடன் கிராம மக்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கோரிய அடிப்படை வசதிகளை விரைவில் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

