திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து மனு அளித்தனர்.
சுமார் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இப்பகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுமக்கள், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் பறவைகள் அங்கிருந்து வெளியேறியதைப் போல, தங்களது அடிப்படைத் தேவையான குடிநீர் இன்றி தவித்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் ஊரை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் வேதனை தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, கூந்தன்குளம் பகுதி மக்களுக்குத் தடையின்றி சீரான குடிநீர் வழங்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









