நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் குழந்தைகள் தினம் மற்றும் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பரமத்தி வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை, கண்ணன் ராசப்பன் அறக்கட்டளையின் தலைவர் கண்ணன் ராசப்பன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஓடினர். பொதுமக்களிடையே சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும் இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டன.









