12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, நாட்டின் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று இந்தியாவின் பாரம்பரிய கைத்தறி மரபை உலகளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கைத்தறி என்பது வெறும் ஆடை தயாரிப்பு மட்டுமல்ல; நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இலட்சக்கணக்கான நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்த துறையாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் "Get Ready With Me (GRWM)" போன்ற வீடியோக்களை கைத்தறி ஆடைகளை அணிந்து பகிருமாறும், #NationalHandloomDay என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இந்திய கைத்தறி பொருட்களை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும், குறைந்தபட்சம் ஒரு கைத்தறி ஆடையையாவது வாங்கி நெசவாளர் குடும்பங்களை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தேசிய கைத்தறி தினம், 1905ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரிய கைத்தறி மரபைப் பாதுகாப்பதுடன், நெசவாளர்களின் உழைப்பை கவுரவிப்பதும், உள்நாட்டு கைத்தறி பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

