நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 50-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன.
தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மற்றும் பள்ளியின் தேசிய பசுமைப் படை ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை காந்தரூபி மற்றும் தளிர்விடும் பாரதம் செயலாளர் பிரபு ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தளிர்விடும் பாரதத்தின் பிரதிநிதியுமான சீனிவாசன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியின் போது, தன்னார்வலர் ரவிச்சந்திரன் மாணவிகளுக்கு பனை விதைகள் நடும் முறைகள் குறித்தும், பனங்கற்கண்டு, பனைவெல்லம், பனங்கிழங்கு மற்றும் பனை விசிறி உள்ளிட்ட பனை மரத்தின் பல்வேறு பயன்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
பள்ளியின் தேசிய பசுமைப் படை பொறுப்பாளர் ஆனி வசந்தி பேசுகையில், வரவிருக்கும் விடுமுறை நாட்களில் மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள ஏரி, குளம் மற்றும் வாய்க்கால் கரையோரப் பகுதிகளில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என்றார். மேலும், அவற்றை உதவிச் செயலி மூலம் பதிவு செய்தால், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமூக சேவகி சித்ராபாபு, கல்வியாளர் முருகன், தன்னார்வலர்கள் கே.எஸ்.லோகேஷ், சரவணன், சந்தோஷ், எஸ்.லோகேஷ் மற்றும் பள்ளியின் தேசிய பசுமைப் படை மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளைத் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் பொருளாளர் சின்னையா மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.









