விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி பகுதியில் முன்விரோதம் காரணமாக விக்னேஷ்வரன் (31) என்பவரை நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ்வரன், கடந்த நவம்பர் 22-ம் தேதி தனது நண்பர் ஹரி பாரத் (20) என்பவருடன் சேர்ந்து கோகுல்ராஜ் (22) என்பவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே சுந்தரபாண்டியன் (24) மற்றும் செந்தூர்ராஜ் (28) ஆகியோரும் இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், நால்வரும் சேர்ந்து விக்னேஷ்வரனைத் தாக்கி, அவரது தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து கொல்லப்பட்ட விக்னேஷ்வரனின் சகோதரர் கணேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.









