கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தன் கணவரை மீட்டுத் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், மூக்கனாங்குறிச்சி அருகிலுள்ள வெள்ளகவுண்டன்பட்டி காலனியைச் சேர்ந்தவர் தவப்பிரியா (26). இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணகுமாரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தவப்பிரியாவின் கணவர் சரவணகுமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைியையும் குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தவப்பிரியா தனது இரண்டு மகள்களையும் காப்பாற்றக் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையே, தனது கணவரை அவரது தாயார் மறைத்து வைத்து வேறு பெண்ணுடன் மறுமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்வதாகக் கூறப்படுகிறது. பெற்றோரும் இல்லாத நிலையில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் தவித்து வந்த தவப்பிரியா, தன் கணவரை மீட்டுத் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி ஏற்கனவே காவல் துறையிலும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த தவப்பிரியா, ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு திடீரென தான் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று, அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரைப் பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.









