விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால், பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு அருகே உள்ள இளந்தகுளத்திலிருந்து தம்பிபட்டி மற்றும் மகாராஜபுரம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு காலை வேளையில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
ஒரே ஒரு பேருந்து இயக்கப்படுவதால் அதில் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக, மாணவர்கள் வேறு வழியின்றி பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், மேற்கூரை மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் ஆபத்தான முறையிலும் பயணிக்கின்றனர். இதனால் எந்த நேரமும் பெரும் விபத்துகள் நேரிடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிரிழப்பு விபத்துகளைத் தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

