Settings

முகப்பு/நகரங்கள்/தடைசெய்யப்பட்ட 'சிம் பாக்ஸ்' சாதனங்கள் பறிமுதல்: ஒருவர் கைது
நகரங்கள்

தடைசெய்யப்பட்ட 'சிம் பாக்ஸ்' சாதனங்கள் பறிமுதல்: ஒருவர் கைது

🕒 28 அக்., 2026, 01:48 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
தடைசெய்யப்பட்ட 'சிம் பாக்ஸ்' சாதனங்கள் பறிமுதல்: ஒருவர் கைது
✨

AI Highlights

  • •திருச்சி உறையூர் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தடை செய்யப்பட்ட சிம் பாக்ஸ் சாதனங்களை சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் பண மோசடி வழக்குத் தொடர்பான விசாரணையில், திருச்சி உறையூர் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 'சிம் பாக்ஸ்' (Sim Box) சாதனங்களை சைபர் கிரைம் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் நிலையத்தில் பதிவான ஆன்லைன் பண மோசடி வழக்கு தொடர்பாக, பெங்களூருவில் 320 சிம் இணைப்புகளுடன் இயங்கி வந்த சட்டவிரோத சிம் பாக்ஸ் நெட்வொர்க்கை கடந்த வாரம் சைபர் கமாண்ட் யூனிட் போலீசார் கண்டறிந்து, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், இந்த மோசடி கும்பலுக்குத் திருச்சியிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைமுகமாக இயங்கி வந்த சிம் பாக்ஸ் சாதனங்கள் அக்.27 அன்று இரவு பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் ஒருவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வரும் இணையவழி அழைப்புகளை, இந்தச் சட்டவிரோத சிம் பாக்ஸ் சாதனங்கள் மூலமாக இந்தியாவின் உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இத்தகைய போலி சிம் பாக்ஸ்கள் மூலமாகவே 'டிஜிட்டல் அரெஸ்ட்' (Digital Arrest) மிரட்டல்கள் மற்றும் பண மோசடிகள் நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் மணிகண்டன் கூறுகையில், "டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் சைபர் கிரைம் மூலமாக ஆன்லைனில் பணம் மோசடி உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்கள் நடைபெற்றால் பொதுமக்கள் 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அல்லது நேரடியாக வந்து புகார் அளிக்கும் பட்சத்தில், தங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு பணம் மீட்கப்படும்" என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "இந்தச் சிம் பாக்ஸ் கருவி இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். தொழில்நுட்ப அறிவுள்ளவர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் இந்திய அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுவதால் இது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாதனத்தை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இந்தியாவில் எந்த ஒரு மூலையில் இருந்தும் இந்த கருவியைப் பயன்படுத்தி டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பண மோசடியில் ஈடுபடலாம் என்றும், இ-சிம்கள் மற்றும் இன்டர்நெட் மோடங்களைப் பயன்படுத்தி இதனை இயக்குவதால் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்ற இருப்பிடத்தை எளிதில் கண்டறிய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டில் இருந்துகூட இதனை இயக்க முடியும் எனவும், வாட்ஸ்அப் அழைப்பு மூலம் உயரதிகாரி போல பேசி இதுபோன்று டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபடலாம் எனவும் தெரிவித்தார்.

உறையூரில் உள்ள ஒரு கட்டிடத்தின் அறையில் இருந்து இந்தச் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், திருச்சி மாவட்டத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் தொடர்பாகப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது இந்த வழக்குத் தொடர்பாகப் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔