திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் ரசாயனம் சாலையில் கொட்டியதால் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் கண் எரிச்சல் காரணமாக, அப்பகுதி பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் எதிரே அமைந்துள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்குச் சொந்தமான, சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான ரசாயனம் ஏற்றிச் சென்ற 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன் திடீரென உடைந்து சாலையில் கொட்டியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசியதுடன், அவ்வழியாகச் சென்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குக் கடுமையான கண் எரிச்சல் ஏற்பட்டது.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் அருகிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோதிலும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

