விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஆனந்த் திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெளியீடு திருவிழா போல் கொண்டாடப்பட்டது. படம் வெளியாகும் முன்பே திரையரங்கு வளாகத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
திரையரங்கின் முகப்பில் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், டிரம்ஸ் முழங்க பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரசிகர் ஒருவர் படம் வெற்றி பெற வேண்டி கையில் தீச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக வந்த நிகழ்வு அப்பகுதியில் கவனம் பெற்றது.
காலை 9:00 மணி சிறப்புக் காட்சி திரையிடப்பட்டதை அடுத்து, ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் படம் பார்க்க வந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ரசிகர்களின் இந்த தொடர் கொண்டாட்டங்களால் ராஜபாளையம் ஆனந்த் திரையரங்கு வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

