டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சியரா எஸ்யூவியின் புதிய Dark Edition மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான கருப்பு நிறத் தோற்றத்துடன் வெளியாகியுள்ள இந்த புதிய பதிப்பின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.13.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சியரா டார்க் எடிஷன் Pure L, Pure L (O), Pure+ L, Adventure+ L, Accomplished மற்றும் Accomplished+ உள்ளிட்ட பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.21.59 லட்சமாக உள்ளது.
கருப்பு நிறத்தில் புதிய தோற்றம்
இந்த புதிய பதிப்பின் முக்கிய சிறப்பம்சமாக Friesian Black என்ற பிரத்யேக கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறத்தில் உள்ள பேட்ஜ்கள் மற்றும் அலங்காரப் பகுதிகளிலும் டார்க் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. 19 இன்ச் அலாய் வீல்களும் கருப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ளன.
காரின் முன்புறம் முதல் பின்புறம் வரை ஒரே டார்க் தீம் தொடரும் வகையில் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. உட்புறத்திலும் முழுமையான கருப்பு நிறத் தீம் வழங்கப்பட்டுள்ளதுடன், Violet Eclipse எனப்படும் ஊதா நிற அலங்கார அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
3 இன்ஜின் தேர்வுகள்
தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்ஜின் தேர்வுகளில் மாற்றம் செய்யப்படவில்லை. வழக்கமான சியரா மாடலில் வழங்கப்படும் 1.5 லிட்டர் Revotron பெட்ரோல், 1.5 லிட்டர் Hyperion டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் KyroJet டீசல் இன்ஜின்கள் டார்க் எடிஷனிலும் தொடர்கின்றன.
மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வேரியண்ட்டைப் பொறுத்து வழங்கப்படுகின்றன.
பிரீமியம் வசதிகள்
உயர்நிலை வேரியண்ட்களில் டூயல்-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ADAS உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, டாடா சியரா பாரத் NCAP சோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டியும் வழங்கப்படுகிறது.
சியரா டார்க் எடிஷனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

