இந்திய பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் புதிய Honda CB500 மோட்டார்சைக்கிளை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரெட்ரோ தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பைக், ரூ.2.75 லட்சம் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய Honda CB500 பைக்கிற்கான முன்பதிவு நாடு முழுவதும் உள்ள ஹோண்டா பிங்விங் பிரீமியம் ஷோரூம்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இந்த பைக் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை வேரியண்ட் அலாய் வீல்களுடன் ரூ.2.75 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஸ்போக் வீல்களுடன் கூடிய மிட்-ஸ்பெக் வேரியண்ட் ரூ.3 லட்சம் விலையிலும், ஸ்போக் வித் ஸ்ட்ரைப் எனப்படும் டாப் வேரியண்ட் ரூ.3.02 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
501cc இன்ஜின்
Honda CB500 பைக்கில் 501cc திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27.6 bhp பவரையும், 43.3 Nm டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.
இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் Assist & Slipper Clutch வசதியும் வழங்கப்பட்டுள்ளது. நகரப் பயணம் மட்டுமின்றி நீண்ட தூரப் பயணங்களுக்கும் ஏற்ற வகையில் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வசதிகள்
மூன்று வேரியண்ட்களிலும் Honda Selectable Torque Control (HSTC) பாதுகாப்பு வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனலாக் மற்றும் டிஜிட்டல் வசதிகள் இணைந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது.
Honda RoadSync வசதி மூலம் ஸ்மார்ட்போனை இணைத்து அழைப்புகள், வழிகாட்டுதல் மற்றும் மெசேஜ் அறிவிப்புகளை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழியாகப் பெற முடியும்.
இந்தியாவிலேயே உற்பத்தி
Honda CB500 மோட்டார்சைக்கிள் முழுமையாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. 350cc-க்கும் அதிகமான மோட்டார்சைக்கிள்களுக்கு தற்போதைய வரி அமைப்பு இருக்கும் நிலையில், இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது போட்டித்தன்மை கொண்ட விலையை நிர்ணயிக்க உதவியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டின் 500cc பிரிவில் ஏற்பட்ட இடைவெளியை இலக்காகக் கொண்டு இந்த புதிய Honda CB500 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், Honda CB350 மாடல்களுக்கு மேலாகவும், Royal Enfield 650cc இரட்டை சிலிண்டர் பைக்குகளுக்கு கீழாகவும் இது நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

