திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (32). கோபாலின் மகன் இவர், திசையன்விளை பகுதியில் உள்ள ஒரு தனியார் பட்டா நிலத்தில் முயல் வேட்டையாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்தச் செயல் குறித்து ராதாபுரம் வனச்சரக அலுவலர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், லிங்கேஸ்வரனை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முயல் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் அவருக்கு ரூ.25,000 இணக்கக் கட்டணம் (அபராதம்) விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டது. வனவிலங்குகளை வேட்டையாடுவதும், அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் சட்டப்படி கடுமையான குற்றம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.









