பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் வகையில் BMW Motorrad நிறுவனம் புதிய F 450 R நேக்கட் பைக்கை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. F 450 GS மாடலின் அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், நகரச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய BMW F 450 R-ல் 420cc, லிக்விட்-கூல்டு பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8,750 rpm-ல் 48 hp பவரையும், 6,750 rpm-ல் 43 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் Easy Ride Clutch தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிளட்ச் பயன்பாட்டை குறைத்து கியர்களை மாற்ற முடியும்.
பைக்கில் ஸ்டீல் டியூபுலர் ஃபிரேம், 43 மிமீ KYB USD முன்பக்க ஃபோர்க் மற்றும் KYB பின்பக்க மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளன. 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் மற்றும் Brembo காலிபர், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தொழில்நுட்ப வசதிகளில் 6.5 இன்ச் TFT டிஸ்ப்ளே, புளூடூத் இணைப்பு, நேவிகேஷன், மியூசிக் கன்ட்ரோல் மற்றும் Heated Grips ஆகியவை உள்ளன. மேலும், பைக்கின் எடை 175 கிலோவாகவும், நிலையான இருக்கை உயரம் 790 மிமீ ஆகவும் உள்ளது. 775 மிமீ மற்றும் 810 மிமீ சீட் உயர விருப்பங்களும் வழங்கப்படுகின்றன.
BMW F 450 R இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும், அதன் அதிகாரப்பூர்வ விலை என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் அறிமுகமானால், இந்த பைக் KTM மற்றும் Kawasaki உள்ளிட்ட நடுத்தர திறன் கொண்ட நேக்கட் பைக் மாடல்களுக்கு போட்டியாக அமைய வாய்ப்புள்ளது.

