மத்திய அரசு பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளதால் பாதிக்கப்படும் உள்நாட்டுப் பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணமாக, ஏக்கருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள தற்போதைய சூழலில், உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்குப் பொருளாதார நிவாரணம் அளிக்கவும் பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு நீக்கியுள்ளது. இச்சலுகை மேலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.
தற்போதைய நிலவரப்படி, பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக (MSP) குவிண்டாலுக்கு 7,710 ரூபாயை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், தற்போதைய பொதுச் சந்தையில் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு 6,500 ரூபாய் மட்டுமே கொள்முதல் விலையாகக் கிடைக்கிறது. நாடு முழுவதும் இந்தியப் பருத்திக் கழகம் (CCI) இந்த ஆதரவு விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் இத்தகைய கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது பருத்தி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதர மாநிலங்களில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்து அரவை ஆலைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து மற்றும் வாகன வாடகைச் செலவினங்களை அந்தந்த மாநில அரசுகளே ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், தமிழக அரசு இந்தச் செலவினங்களை ஏற்க மறுப்பதால், தமிழகத்தில் பருத்திக் கொள்முதல் செய்வதை இந்தியப் பருத்திக் கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பருத்திக் கொள்முதல் இல்லாததால் விவசாயிகள் ஏற்கனவே கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வரும் நிலையில், தற்போதைய 11 சதவீத இறக்குமதி வரி நீக்க நடவடிக்கை மேலும் பெரும் சுமையாக மாறியுள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டுச் சந்தையில் பருத்தி விலை குவிண்டாலுக்கு மேலும் 2,000 ரூபாய் வரை வீழ்ச்சியடையக் கூடும். இந்த விலை வீழ்ச்சியால் பருத்தி விவசாயிகளுக்கு ஏக்கருக்குச் சராசரியாக 30,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே, இறக்குமதி வரி நீக்கத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த இழப்பைச் சமன் செய்ய, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஏக்கருக்கு 30,000 ரூபாய் உற்பத்தி மானியமாக வழங்கி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். உள்நாட்டில் விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சியடையும் போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தொழிற்துறையினருக்குச் சலுகைகள் வழங்குவதில் தவறில்லை; அதே வேளையில், அதே முன்னுரிமையையும் சமமான அணுகுமுறையையும் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கும் அரசு வழங்க வேண்டும் என ஈசன் முருகசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

