வரும் 2027-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள உயரிய ‘பத்ம விருதுகளுக்கு’ தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சேவையாற்றியவர்களை அங்கீகரிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இனம், தொழில், பதவி அல்லது பாலின பாகுபாடின்றி தகுதியுடைய அனைவரும் இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கியத் தகுதிகள்:
பத்ம விருது நாட்டின் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருது என்பதால், விண்ணப்பிக்கும் நபர்கள் தத்தமது துறைகளில் ஏற்கனவே தேசிய அல்லது மாநில அளவிலான விருதுகளைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைத் தவிர்த்து, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் உட்பட இதர அரசுப் பணியாளர்கள் இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ராஷ்ட்ரிய புரஸ்கார் இணையதளமான https://awards.gov.in வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 31.07.2026 ஆகும்.

