கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களின் விவரங்கள் அடங்கிய அடையாள அட்டைகள் (பாதுகாப்பு டேக்) அணிவிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிரிவலம் செல்லவும், அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபத்தைக் காணவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இந்த மாபெரும் கூட்ட நெரிசலில் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து தவறிப் பிரிந்து செல்வதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைத் தன்னார்வலர்களாக இணைத்துப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவிழாவிற்கு வரும் குழந்தைகளின் பெயர், பெற்றோர் பெயர், சொந்த ஊர் மற்றும் அவசரத் தொடர்பு தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பாதுகாப்பு டேக்குகள் குழந்தைகளின் கைகளில் அணிவிக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கையின் மூலம், கூட்ட நெரிசலில் குழந்தைகள் யாரேனும் பிரிந்து சென்றால், அடையாள அட்டையில் உள்ள விவரங்களைக் கொண்டு உடனடியாகப் பெற்றோரைத் தொடர்பு கொண்டு குழந்தைகளைப் பாதுகாப்பாக ஒப்படைக்க முடியும். மேலும், குழந்தைகள் காணாமல் போவது தொடர்பான அவசர உதவிகளுக்குக் குழந்தைகள் உதவி எண்களான 1098-ஐத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு டேக் அணிவிக்கும் பணிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.









