சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/ஸ்ரீரங்கத்தில் வாராந்திர ரயில் நிறுத்தம்: ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ரயிலை வரவேற்றார் எம்பி துரை வைகோ!
அரசியல்

ஸ்ரீரங்கத்தில் வாராந்திர ரயில் நிறுத்தம்: ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ரயிலை வரவேற்றார் எம்பி துரை வைகோ!

The News Outlook
🕒 8 ஜூலை, 2026, 01:58 PM
⏱️ 3 நிமிடம் வாசிப்பு
ஸ்ரீரங்கத்தில் வாராந்திர ரயில் நிறுத்தம்: ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ரயிலை வரவேற்றார் எம்பி துரை வைகோ!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஹைதராபாத் சார்லபள்ளியிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும், அதனை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த ஹைதராபாத் - சார்லபள்ளி ரயிலுக்கு துரை வைகோ நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் கீர்த்தனாவின் கருத்து குறித்த சர்ச்சை:

அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் பயின்ற விதம் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் புலமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "அமைச்சர் கீர்த்தனா தான் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றவர் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். அவர் ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்தவர். தான் அரசுப் பள்ளியில் பயின்றதால் போதிய ஆங்கிலப் புலமை இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை போதிய அளவில் இல்லாதது ஒரு குறையாகவே உள்ளது என்ற தனது கருத்தையே அவர் மீண்டும் பிரதிபலித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், இந்தக் கருத்தை பலரும் சர்ச்சையாக்கி வருகின்றனர். கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் தேனும் பாலும் ஓடியது போல பேசி வருகின்றனர். ஆனால், தமிழக மக்கள் லஞ்ச லாவண்யமற்ற, வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தையே விரும்புகின்றனர்" என்று தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் குறித்த விமர்சனங்கள்:

தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் அரசியலுக்குப் புதியவர்கள். எனவே, எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கலாமே தவிர, எதற்கெடுத்தாலும் விமர்சிப்பதையும் கொச்சைப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்" என்றார்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி:

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது குறித்த கேள்விக்கு, "கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசுப் பணி வழங்குவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. இச்சம்பவத்தில் தவறிழைத்தது யார் என்பது விரிவான விசாரணைக்கு பிறகே தெரியவரும். ஏற்கனவே தமிழக அரசும், தவெக தலைவர் விஜயும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார இழப்பீடுகளை வழங்கியுள்ளனர். அவர்கள் ஏழ்மையான குடும்பங்கள் என்பதால் அவர்களுக்கு அரசுப் பணி வழங்குவது முறையானதே" என்று ஆதரித்துப் பேசினார்.

மத்திய அரசுடன் இணக்கமான போக்கு:

மத்திய அரசுடன் மோதல் போக்கை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு, "மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கு இருக்கக் கூடாது. அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்ப்பது ஒருபுறம் இருந்தாலும், மாநில நிர்வாக நலனுக்காக இணங்கிச் செல்ல வேண்டும் என்பதில் விஜய் தலைமையிலான கொள்கை நிலைப்பாடு உறுதியாக உள்ளது. இதற்கு உதாரணம் மும்மொழிக் கொள்கை மீதான அணுகுமுறை ஆகும். மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் மாநில நிர்வாகத்தை முழுமையாக நடத்த முடியாது என்பதால், நிர்வாக ரீதியிலான மோதல் போக்கைத் தவிர்க்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ளது" என்றார்.

ஒன்றிய அரசு - இந்திய அரசு சர்ச்சை:

மத்திய அரசை 'ஒன்றிய அரசு' அல்லது 'இந்திய அரசு' என்று குறிப்பிடுவது குறித்த கேள்விக்கு, "இந்திய அரசு என்றும் கூறலாம், ஒன்றிய அரசு என்றும் கூறலாம். இந்திய அரசை பாகிஸ்தான் அரசு என்றோ, சீன அரசு என்றோ கூற முடியுமா? இதனை சில அறிவிலிகள் தேவையற்ற சர்ச்சையாக்கி விமர்சித்து வருகின்றனர்" என்று சாடினார்.

வடகிழக்கு மாநிலங்களில் மொழித்திணிப்பு:

அசாம் மாநிலத்தில் இந்தி அலுவல் மொழியாக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், "நாடு முழுவதும் மொழித்திணிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அசாம், மணிப்பூர், மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. அந்த மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதால் இது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால், மும்மொழிக் கொள்கையின் மூலம் ஆங்கிலம் போன்ற உலகளாவிய மொழிகளைக் கற்க முடியாத சூழலை உருவாக்கி விடுகின்றனர். பல மாநிலங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாகத் திணிக்கப்படுகிறது. இந்தி அல்லது சமஸ்கிருதம் படிப்பது என்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டும். மொழிப்பற்று என்பது அனைவருக்கும் அவசியம், ஆனால் அது மொழிவெறியாக மாறக்கூடாது" என்று வலியுறுத்தினார்.

திருச்சி இடைத்தேர்தல்:

இறுதியாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அத்தொகுதியில் மதிமுக போட்டியிடாது என்று அவர் திட்டவட்டமாக உறுதிபடத் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...