திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டன் ஒன்றியத்தில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பங்கேற்ற பொதுமக்கள் குறைகேட்பு முகாம் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியதாவது:
“ஏற்கனவே திருவானைக்காவல், அந்தநல்லூர் ஆகிய இரண்டு பகுதிகளில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்று மணிகண்டன் ஒன்றியத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. இனிவரும் நாட்களிலும் இத்தகைய குறைகேட்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.
பொதுவாக குடிநீர், சாலை, மின்சாரம் மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளையே பொதுமக்கள் அதிகம் வலியுறுத்துகின்றனர். அத்துடன் வேலைவாய்ப்பு கோரியும் ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. அரசுத் துறைகளிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிலமற்றவர்கள், வீடற்றவர்கள் மற்றும் வீட்டுமனைப் பட்டா கோருபவர்களின் மனுக்கள் மீது, அரசுத் திட்டங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
ஸ்ரீரங்கம் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த ஆட்சிக் காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் யாரையும் நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டதில்லை. மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்கும்போதுதான் அவர்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படும். உடனடியாகத் தீர்க்கக்கூடிய கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளுக்குக் காலதாமதம் ஆகலாம்; ஒருசில கோரிக்கைகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இயலாது போனால், அதற்கான காரணங்கள் குறித்து மக்களிடம் விரிவாக விளக்கப்படும். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு நேரடியாகச் சென்று குறைகளைக் கேட்டறிவேன்” என்றார்.
தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 'விஐபி' (VIP) எனக் கூறி விதிகளை மீறி தரிசனம் செய்த நபர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் விதிமீறல்களோ, தவறுகளோ கண்டறியப்பட்டால் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
விஸ்வரூப தரிசனத்திற்கு அனுமதி மறுத்த கோயில் அதிகாரியைப் பழிவாங்கும் நோக்கில், ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் மது அருந்துவது போல் போலியான வீடியோ வெளியிடப்பட்டது குறித்த கேள்விக்கு, “இது காவல்துறை மூலம் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம். தனிப்பட்ட நபர் யாரோ இந்தச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார்.
மேலும், “இத்தனை ஆண்டுகளாக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததற்கும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதற்கும் காரணம், அவர்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் முழுமையாகப் பூர்த்தியாகாமல் இருப்பதுதான். முதலமைச்சரின் வருகை மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சரே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்” என்றார்.
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் எங்குள்ளன என்பது குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் யார் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். திரைப்படங்களில் காட்டுவது போல் ஒரே நாளில் எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியாது. கோயில் பெயரில் உள்ள நிலங்கள் அனைத்தும் கோயிலுக்கே சொந்தமானவை. அதை யார் ஆக்கிரமித்திருந்தாலும், அதற்கு யார் பின்னணியாக இருந்தாலும், எவ்வித பாரபட்சமுமின்றி சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களில் கனிம வளக் கொள்ளை நடைபெறுவதாக எழுப்பப்பட்ட புகாருக்குப் பதிலளித்த அவர், “அனைத்து புகார்களையும் நாங்கள் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம். அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் கனிம வளக் கொள்ளை, மணல் கொள்ளை போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீரங்கத்திலும் கூட இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடக நண்பர்கள் கனிம வளக் கொள்ளை குறித்து தகுந்த ஆதாரங்களுடன் தகவல் அளித்தால், அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, உடனடியாகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இறுதியாக, இடைத்தேர்தலைக் கருத்தில் கொண்டு கரூர் மாவட்டத்தில் 32 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “அது போன்ற நிர்வாக ரீதியிலான முடிவுகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனித்துக் கொள்வார்” என்று கூறி விடைபெற்றார்.

