கோவை வேலந்தாவளம் பகுதியில் உள்ள சாய் நேச்சுரோபதி மற்றும் யோகா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைப்பதற்காக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திப்பது அரசியல் கட்சிகளின் கடமை என்றார். அதேபோல், பழங்குடியின மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் ஒத்துழைப்பு, நிதி மற்றும் உதவி அவசியம் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
விளிம்புநிலை மக்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு அரசு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்காமல் நிறுத்திவிட்டால், அந்த திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் என்றும் திருமாவளவன் கூறினார்.
ஆடம்பர நிகழ்ச்சிகளில் உணவு வீணடிப்பு
நிகழ்ச்சிகளில் உணவு வீணடிக்கப்படுவது குறித்தும் திருமாவளவன் பேசினார். ஆடம்பரமான விழாக்களில் ஒருவர் சாப்பிடக்கூடிய அளவை விட பல மடங்கு அதிகமாக உணவை இலையில் பரிமாறி, மீதமுள்ள உணவு குப்பையில் கொட்டப்படும் நிலை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒருவருக்காக வைக்கப்படும் அந்த அளவு உணவு பல ஏழைகளின் பசியை போக்கும் வகையில் இருக்கும் என்றும், இதுபோன்ற ஆடம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிகமாக உணவு உட்கொள்வதால் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் சிக்கல்
தமிழ்நாட்டில் பழங்குடியின மக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவர்களது பிரச்சினைகள் போதிய அளவில் கவனிக்கப்படாமல் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். குறிப்பாக, பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் பெறுவதில் கூட பல்வேறு சிரமங்கள் இருப்பதாக கூறிய அவர், இதனை மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கட்சி மற்றும் அரசியல் கருத்துகளில் வேறுபாடுகள் இருந்தாலும், மனிதநேயம் அனைவருக்கும் பொதுவானது என்றும், அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடன் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
பழங்குடியின மக்களுக்கான திட்டங்கள்
முன்னதாக பேசிய அமைச்சர் வன்னியரசு, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கான நிதியை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தானும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பழங்குடியின மற்றும் ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடைமுறைகளை பாதுகாப்பதற்கும், அவர்களது மொழியை மீட்டு எழுத்து வடிவம் வழங்குவதற்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், செங்காந்தள் மலரை சாகுபடி செய்து, அதனை நேச்சுரோபதி மருத்துவ பயன்பாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வன்னியரசு கூறினார்.
யோகா, நேச்சுரோபதியை மதம் சார்ந்ததாக மாற்றக்கூடாது
நேச்சுரோபதி மருத்துவம் மற்றும் யோகா போன்ற துறைகளை சிலர் மதம் சார்ந்த கருத்துகளை பரப்புவதற்கான கருவியாக பயன்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் வன்னியரசு குற்றம்சாட்டினார்.
மருத்துவம் மருத்துவமாகவும், யோகா யோகாவாகவும் இருக்க வேண்டும் என்றும், அவற்றுக்குள் மதம் சார்ந்த செயல்பாடுகள் இடம்பெறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இது அறிவியல் மற்றும் இயங்கியலுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
சமூக நீதித்துறையின் திட்டங்களுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கி வரும் நிலையில், மத்திய அரசும் சமூக நீதித்துறையின் திட்டங்களுக்கு உரிய நிதியை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேட்டி
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மத்திய அமைச்சரை சந்தித்து மலைவாழ் மக்களின் நலத்திட்டங்களை மேம்படுத்துதல், வீடுகள் கட்டித் தருதல், சாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
யோகா நிறுவனங்கள் சில, யோகா கற்றுத்தருவதாக கூறி மதம் சார்ந்த கருத்துகளை பரப்புவதாக அமைச்சர் வன்னியரசு தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், மருத்துவம் மருத்துவமாகவும், யோகா யோகாவாகவும் இருக்க வேண்டும் என்பதையே அவர் சுட்டிக்காட்டியதாக விளக்கம் அளித்தார்.
மதச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடிக்கும் நிலையில், எந்த அமைப்பாக இருந்தாலும் அல்லது அரசாக இருந்தாலும் மதம் சார்ந்த கருத்துகளை பிரசாரம் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது மக்களிடையே நிலவும் ஒற்றுமையை பாதிக்கக்கூடும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகும் வாய்ப்பு எப்போது வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த சமூகத்தினர் முதலில் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு வலிமை பெறும்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.
முதலமைச்சருடனான கூட்டத்தில் துணை முதலமைச்சர் தொடர்பான அரசியல் நகர்வுகள் அல்லது பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, “நீங்கள் வந்து கலந்து கொண்டு பரிசீலியுங்கள்” என திருமாவளவன் நகைச்சுவையாக பதிலளித்தார்.

