பழனியில் சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை சீரமைக்க மொத்தம் ரூ.3.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பழனியில் நடைபெற்ற தனியார் பேக்கரி திறப்பு விழாவில் அமைச்சர் விக்னேஷ் பங்கேற்றார். இதற்கு முன்னதாக கட்சி அலுவலகத்திற்கு வந்த அவருக்கு, மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி N.பாலன், நகரச் செயலாளர் மிதுன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ், பழனி சண்முக நதியை தூய்மைப்படுத்தி சீரமைப்பதற்காக ரூ.1.75 கோடி நிதியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், திருஆவினன்குடி பகுதியை ஒட்டியுள்ள பழனி வையாபுரி குளத்தை சீரமைக்க ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போதைய சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், இரு பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை
டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்கள் சேதமடைவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாட்டில்களை பாதுகாப்பாக கையாள்வது ஊழியர்களின் பொறுப்பு என்றார்.
அதே நேரத்தில், ஊழியர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். பாட்டில்கள் சேதமடையாத நிலையிலும் அவை உடைந்ததாக தவறான கணக்கு காட்டப்படும் நடைமுறைகளை தவிர்த்து, ஊழியர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடைகளை மாற்ற நடவடிக்கை
பள்ளிகள் மற்றும் ஆன்மிகத் தலங்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகளை மாற்றுவது தொடர்பாக பேசிய அமைச்சர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள கடைகளுக்கு மாற்று இடம் குறித்து பொதுமக்களோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகளோ உரிய இடத்தை சுட்டிக்காட்டினால், அந்த மதுக்கடைகளை மாற்ற அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கேரளா கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
கேரளாவில் கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஸ்பிரிட் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், கள்ளுக்கடைகள் தொடர்பான ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர் முதலமைச்சர் உரிய முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

