விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜமீன்சல்வார்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், இன்று காலிக்குடங்களுடன் சிவகாசி–கன்னிசேரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் விநியோகத்தை சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அதிகாரிகளின் உறுதிமொழியை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

