நீட் முறைகேடு : மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல். மருத்துவ மாணவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் நீட் முறைகேட்டைத் தடுக்கத் தவறிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது : நீட் தேர்வு முறையில் தொடர்ந்து நடைபெறும் குளறுபடிகள், தேசிய தேர்வு முகமையின் நிர்வாகத் திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன. மாணவர்களின் பல ஆண்டுகால உழைப்பையும், அவர்களது மன உளைச்சலையும் அலட்சியப்படுத்தும் வகையில் நடைபெறும் இத்தகைய தவறுகளுக்கு மத்திய அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் குளறுபடிகள் தொடர்ந்து நடைபெறுவது மாணவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கும் செயலாக மாறியுள்ளது. இத்தகைய தொடர் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். நாக்பூரைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதனை ராகுல் காந்தி வன்மையாகக் கண்டித்ததோடு, 'நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்தோடு சூதாடுவதை நிறுத்துங்கள்' என மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தார். இது ஒரு கல்வி முறையே அல்ல; மாறாக, மாணவர்களின் நேரம், பணம் மற்றும் மன அமைதியைப் பறிக்கும் ஒரு பகல் கொள்ளை ஆகும். எக்காலத்திலும் மாணவர்களின் உரிமைகளுக்காக எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் எப்போதும் துணை நிற்கும். இந்த நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் முழுமையான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்திய தேசிய காங்கிரஸ் வலியுறுத்துகிறது. மத்திய அரசுக்கு மாணவர்களின் நலனே முதன்மையாக இருக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு எந்தவித அலட்சியமும் காட்டக் கூடாது. நாட்டின் கல்வி அமைப்பின் மீது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மீண்டும் நம்பிக்கை ஏற்படும் வகையில் உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். நீட் முறைகேட்டை கண்டித்து மாநிலத் தலைமையின் உத்தரவின் படி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். என தெரிவித்தார். பேட்டி: கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத்தலைவர் - காங்கிரஸ் - விருதுநகர்
அரசியல்
நீட் முறைகேடு : மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்.
The News Outlook
🕒 6 ஜூலை, 2026, 11:39 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
