தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாத நிலையில், ஆபாசமான அரசியலை முன்னெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குற்றம்சாட்டினார்.
சென்னையில் வெளியிட்ட தனது எக்ஸ் (X) பதிவில் நயினார் நாகேந்திரன், நாட்டின் மக்களின் ஆதரவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடியை அரசியல் மற்றும் சித்தாந்த அடிப்படையில் எதிர்க்க முடியாமல், தனிநபர் தாக்குதல்களை ராகுல் காந்தி மேற்கொள்கிறார் என விமர்சித்தார்.
மேலும், இந்திய பிரதமரின் வெளிநாட்டு தலைவர்களுடனான நட்புறவை மிகவும் தரக்குறைவாக சித்தரிப்பது பொறுப்பற்ற அரசியல் அணுகுமுறை என்றும், அதுபோன்ற கருத்துகள் அரசியல் நாகரிகத்திற்கு ஒவ்வாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் போன்ற நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட தேசியக் கட்சியின் வாரிசாக இருந்தும், ராகுல் காந்தியால் நாட்டின் உயரிய பதவியை அணுக முடியாததற்கான காரணத்தை அவருடைய அரசியல் செயல்பாடுகளே வெளிப்படுத்துகின்றன எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இத்தகைய அரசியல் முதிர்ச்சியின்மை காங்கிரஸின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்று அவர் விமர்சித்தார்.

