நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் துறைவாரியாக ஆய்வு செய்யப்பட்டன.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினரும், செய்தித் தொடர்புச் செயலாளருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகையில், 'கடந்த நிதியாண்டுகளில் ஒன்றிய அரசின் 23 துறைகளின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்ட சிக்கல்கள், மின்னழுத்தப் பிரச்சனைகள் மற்றும் சாலைகளைச் சரி செய்யாமல் செல்வது குறித்த பொதுமக்களின் குறைகள் அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு, அவற்றைச் சரி செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'சுருக்குமடி வலைக்காகப் போராடி வரும் உவரி மக்களின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். ஒன்றிய துறைச் செயலாளரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளேன். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இது குறித்து வலுவாகப் பேசி, மீனவர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என்றார்.
புதிய அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 'புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் கற்றுக்கொண்டு செயல்படுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், ஒரு ஆட்சியின் 6 மாத காலச் செயல்பாடு எந்தவொரு இலக்கும் இன்றி திசையற்ற அரசாகவே உள்ளது. இந்த அரசை ஆஸ்தான ஜோதிடர்கள்தான் நடத்துகிறார்கள். இலக்கை நோக்கிய பயணத்தில் இவர்களின் செயல்பாடு பூஜ்ஜியமாகவே உள்ளது' என்று விமர்சித்தார்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, 'எங்கே காணோம் என்று சொல்பவர்களுக்கு, வந்துவிட்டேன் என்று சொல்லு' எனத் தலைவர் பதிலளிக்க வேண்டும் என்பதும், கொளத்தூரில் அவர் போட்டியிட வேண்டும் என்பதும் திமுக தொண்டனாக எங்களின் ஆசை. ஆனால், அதுகுறித்து தலைவர்தான் இறுதி முடிவு எடுப்பார்' எனத் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், 'இது போன்ற வழக்குகளும் பழிவாங்கும் நடவடிக்கைகளும் எங்களுக்குப் புதியதல்ல. 1977 மற்றும் 2011-ம் ஆண்டுகளிலும் இதுபோன்று நடந்துள்ளது. திமுகவினருக்கு இதெல்லாம் பழக்கமானதுதான். அவர்கள் இது போன்ற வேலைகளைச் செய்யும்போதுதான், நாம் களத்தில் இன்னும் வேகமாகச் செயல்படுகிறோம் என்பது புரியும்' என்றார்.









