தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், 129 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வருவதாக 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தக் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணாமலை தனது அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை தொகுத்து, அந்தக் கடைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குழந்தைகள் கல்வி கற்கும் இடங்கள், மக்கள் வழிபடும் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் மதுக்கடைகள் இயங்குவது சமூக நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை அகற்றுவது அவசியம் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக அரசு வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையை அறிவித்து செயல்படுத்தியிருந்தது. அதன்பிறகும் விதிமுறைகளுக்கு முரணாக சில கடைகள் தொடர்ந்து இயங்குவதாக அண்ணாமலை கூறி, புதிய பட்டியலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

