மயிலாடுதுறை அரசினர் பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில், சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ், மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதலாக 101 செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள 1,695 செவிலியர் பணியிடங்களில் இருந்து, மாவட்ட நல சங்கங்கள் மூலம் வெளிப்படையான முறையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், நோயாளிகளின் நலன் கருதி இதயநோய் மற்றும் நரம்பியல் நிபுணர்களும் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், 'தமிழக நிதிநிலை அறிக்கையில் மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் 41 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்' என்றார்.
குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவி நிலுவையில் இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து, விடுபட்ட அனைத்து பயனாளிகளுக்கும் நிதியுதவி விரைவாகக் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.









