விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி எஸ். கொடிக்குளம் பேரூராட்சியில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட மின்சாரக் குப்பை சேகரிப்பு வாகனங்கள் பராமரிப்பின்றி பாழடைந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இப்பேரூராட்சியில் தூய்மைப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காகப் பல லட்சம் ரூபாய் செலவில் மின்சாரக் குப்பை அள்ளும் வாகனங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. இருப்பினும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தும், இரும்புத் தகடுகள் துருப்பிடித்தும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்த வாகனங்கள் தற்போது பயன்பாடின்றி பேரூராட்சி அலுவலக வளாகத்திலேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் செயலிழந்து கிடப்பதால், அப்பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகள் முறையாக நடைபெறுவதில்லை எனப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவதுடன், சுகாதாரப் பிரச்சினைகளும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, வீணாகிக் கிடக்கும் இந்த மின்சார வாகனங்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகப் பார்வையிட்டு, உரிய சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

