திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த சில தனியார் தோல் தொழிற்சாலைகள் தங்களது கழிவுநீரைப் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக ஆற்றில் திறந்துவிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால் மாராப்பட்டு பகுதியில் பாலாறு முழுவதும் கடுமையான இரசாயனக் கழிவுகளுடன் நுரைப்பொங்கி ஓடுகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், இதனால் குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைகளின் இந்தச் சட்டவிரோதச் செயலால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









