கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் நாகம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் காற்றாலை மின் கம்பங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும், இப்பிரச்சனை தொடர்பாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியைச் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முறையிட்டுள்ளனர்.
நாகம்பள்ளி கிராமப் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனு விவரங்களின்படி, இப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் Amplus Theta Energy Pvt. Ltd. என்ற தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சாலைகளின் ஓரங்களில் இந்த மின் கம்பங்கள் அமைக்கப்பட்டால், பொதுமக்கள் மற்றும் விவசாயப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், சாலையோர மின் கம்பங்களால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் கடும் இடையூறு ஏற்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலைகளின் இருபுறங்களிலும் காற்றாலை மின் கம்பங்கள் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருவேளை காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமிருப்பின், முக்கிய சாலைகளின் ஓரங்களில் மின் கம்பங்களை நிறுவுவதற்குப் பதிலாக, நிலத்தடியில் கேபிள் (Underground Cable) முறையில் மின்சாரத்தைக் கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியைச் சந்தித்து இப்பிரச்சனை குறித்து விளக்கி, உடனடியாகத் தலையிட்டு தீர்வு காணுமாறு முறையிட்டுள்ளனர்.









