விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உரிய அனுமதியின்றி இரண்டரை யூனிட் ஜல்லிக்கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சுழி பூமிநாதன் கோவில் பகுதியில் திருச்சுழி காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்திச் சோதனையிட்டபோது, தி.பச்சேரியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த அந்த வாகனத்தில் எவ்வித அரசு அனுமதியுமின்றி இரண்டரை யூனிட் அளவிலான ஜல்லிக்கற்கள் ஏற்றிச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து டிப்பர் லாரியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அதனைத் திருச்சுழி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து திருச்சுழி கிராம நிர்வாக அலுவலர் (VAO) சந்தன மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், லாரி ஓட்டுநர் முனீஸ்வரன் மற்றும் லாரியின் உரிமையாளர் முனியாண்டி ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

