கோவை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் 5-வது ‘ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா’ மாநாடு, “எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்பு தடை ஓட்டப் பயிற்சியுடன் தொடங்கியது.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக எஸ்எஸ்விஎம் வேர்ல்ட் ஸ்கூல் மாணவர்கள் பங்கேற்ற ‘ஸ்டூடண்ட் ஃபர்ஸ்ட் ஆப்ஸ்டக்கிள் கோர்ஸ்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு தடைகளை கடந்து, தங்களது உடல் திறன், மன உறுதி மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினர். மாணவர்களுடன் கல்வி நிறுவன நிர்வாகக் குழுவினரும் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இன்று சவால்களை எவ்வாறு கடந்து செல்வது என்பதை குழந்தைகள் கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் வாழ்க்கை வழங்கும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் அவர்களுக்கு உருவாகும்” என்றார்.
இந்த மூன்று நாள் மாநாட்டில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். செப்டம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ககன்யான் விண்வெளி வீரர் ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், பரதநாட்டியக் கலைஞர் ருக்மணி விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.
மாணவர்களின் ஆரோக்கியம், உடற்தகுதி, மன உறுதி, ஒழுக்கம் மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக கல்வி நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

